ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அவசரச்சட்டம் பிறப்பிப்பதால் எந்த விதமான அரசியல் சிக்கலும் வராது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

3ஆண்டுகளாக

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 3 ஆண்டாக நீடிக்கிறது. இதை நீக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து 3 நாட்களாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்தே, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தார். அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் தி நியூஸ் மினிட் இணையதளத்துக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ, ஜல்லிக்கட்டு குறித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது-

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அது ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசரச்சட்டம் கொண்டுவருவதில் தவறு என்று மத்திய அரசு கருதுகிறது.

ஆனால், அந்த கருத்து தவறானது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவசரச்சட்டம் இதற்கு முன் பல முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜமிந்தாரி ஒழிப்புச் சட்டம் குறித்த வழக்கு உள்ள போதே அவசரச் சட்டம் அதன்மீது இயற்றப்பட்டது.

அதேபோல இந்திரா காந்தி மீது தேர்தல் விதி மீறல் வழக்கு இருந்தபோதே நாடாளுமன்றத்தில் அதன் மீது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஏன் அரசியல் சட்டமே கூடத் திருத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச்சட்டம் இயற்றி அதை பிரதமர் பரிந்துரை செய்தால், குடியரசுத் தலைவர் அங்கீகாரம் அளிப்பார்.

நாடாளுமன்றம் கூடும்போது , அந்த அவசரச்சட்டத்துக்கு அங்கீகாரம் பெற வேண்டும். அந்த சட்டத்தில் காளைகளுக்கு எந்த துன்புறுத்தலும் இல்லாதவாறு விதிமுறையும் சேர்க்கலாம்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.