சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில், காந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இங்கு 3 தனியார் வங்கி ஏடிஎம் மையம், ஹாட்சிப்ஸ் என்ற பெயரில் பேக்கரி உள்பட 7 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த கடைகளுக்கான வாடகை வசூலிப்பது, பராமரிப்பு பணி ஆகியவை காந்தியின் அண்ணன் நித்தியானந்தம் என்பவர் செய்து வந்தார். பேக்கரின் கடை உரிமையாளர் எம்ஆர் நகரை சேர்ந்த ஆனந்தன்.

கடந்த 15ம் தேதி இரவு பேக்கரியில் சிப்ஸ் தயாரித்தனர். இரவு 9 மணிக்கு கடையை பூட்டி கொண்டு ஆனந்தன் வீட்டுக்கு சென்றார். இரவு 11 மணியளவில் பேக்கரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்ததும் ஆனந்தன் அங்கு சென்றார்.

முன்னதாக கொடுங்கையூர், எழில்நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அப்போது, கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே செல்ல முயன்றபோது, அங்கிருந்த சிலிண்டர் வெடித்தது. அதில், தீயணைப்பு வீரர் ஏகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்தனும் படுகாயமடைந்தார்.

இந்த தீ விபத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்கள், போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்பட 47 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு பரந்தாமன் என்பவரும், நேற்று காலையில் அபிமன்யு என்பவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட ஆனந்தன், நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திடீரென மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.