ஓட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய 30 வயதுடைய வாலிபர், உணவக ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டெல்லியை சேர்ந்தவர் பவன். மந்தாவலி பகுதியில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கிழக்கு டெல்லியின் பிரீத் விகாரில் உள்ள கமல் தாபாவிற்கு உணவருந்த பவன் சென்றார்.

அங்கு அவருக்கு பரிமாறப்பட்ட உணவின் தரத்தில் அதிருப்தியடைந்த அவர், அதுபற்றி அங்குள்ள ஓட்டல் ஊழியர்களிடம் உணவு தரமாக இல்லை குடுத்த காசுக்கு ஏற்ற உணவு இது இல்லை என கேட்டிருக்கிறார்.

இதில் பவனுக்கும், ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் சாம்பார் கரண்டியால் பவனின் முழங்காலில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் இருதரப்பும் மோதி கொண்டதில் படுகாயமடைந்த பவன், அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலனிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய உணவக ஊழியர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.