மழைக்கு தற்காலிக ரெஸ்ட்.! மீண்டும் சென்னைக்கு எப்போது.? தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்
வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால், கனமழைக்கு வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். பூண்டி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன.
இறுதி கட்டத்தை எட்டிய வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிரம்பிய ஏரிகள்
இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னைக்கு கடைசி மழையை கொடுத்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி அணை மீண்டும் நிரம்பிவிட்டது. தற்போது சென்னையில் உள்ள அனைத்து ஏரிகள் 95% நிரம்பிவிட்டது. இதனால் பயப்பட எதுவுமில்லை, மேலும் கனமழை இப்போதைக்கு வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் 82 மி.மீ, நகிரி நீர்பிடிப்பு பகுதியில் 70 மி.மீ மழை பெய்திருக்கிறது. எனவே பூண்டி ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தவர், மறுபுறம் ரெட்ஹில்ஸ் மற்றும் செம்பரபாக்கம் கூட 90% அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. அடுத்தாக டிசம்பர் மாதம் இறுதியில் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். ஜனவரியில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது. பெரும்பாலும் ஜனவரியில் இலங்கைக்கு அதிகபட்ச மழை பெய்யும். தென் தமிழ்நாடு மற்றும் டெல்டாவில் இந்த மாத இறுதியில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்,
மீண்டும் எப்போது மழை
காற்றழுத்த தாழ்வு பகுதியின் கடைசி நாளான இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, , சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் பகுதிகளில் மழை பெய்யும். அதே நேரத்தில் பெரிய மழை பெய்யாது, ஒரு சில இடங்களில் மட்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.