ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. புதிய தலைமைச்செயலகம் தொடர்பாக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி 2015-ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்த இந்த விசாரணை ஆணையத்தில் நடைமுறைகளை எதிர்த்தும் விசாரணை ஆணையத்தின் சம்மனை ரத்து செய்யக்கோரியும் திமுக தலைவர் கருணாநிதி வழக்கு தொடர்ந்தார். 

இது தொடர்பான வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை ஆணையங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். விசாரணை ஆணையம் என்பது வெறும் கண்துடைப்புக்காகவே இதுபோன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைக்கிறது என கடுமையாக சாடியுள்ளார். மேலும் பொதுமக்களின் பணத்தை வீணடிக்க கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார். 

மேலும் நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்தும், 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை அரசு தப்பில் எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். பிற்பகலுக்குள் அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.