திருவாரூர்

திருவாரூரில் சேதமடைந்த சாலையை சீரமைக்காதது, போதிய குடிநீர் வழங்காதது, தெரு  மின்விளக்குகள் எரியாதது போன்ற புகார்களில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள செறுபனையூரில் தொடங்கி மாடன் கோவிலடி வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. 

மேலும், இந்தப் பகுதி மக்களுக்கு போதிய குடிநீரும் வழங்கப்படுவதில்லை. தெரு மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் மக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சபடுகின்றனர். 

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, செறுபனையூர் கிராம மக்கள் நேற்று உதயமார்த்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் தனவேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு நிர்வாகிகள் செல்லத்துரை, வீரமணி, கனகசுந்தரம், கிளை செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்தப் போராட்டத்தில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சேதமடைந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து, விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் ஒன்றிய அதிகாரிகள், காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

"இந்த கோரிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.