EPS and Udhayanidhi : பாஜகவின் அடிமையாக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, வாரிசு என்பதைத் தவிர உதயநிதிக்கு வேறு தகுதி இல்லை என கடுமையாக சாடினார்.
Edappadi Palaniswami vs Udhayanidhi Stalin : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடையே வார்த்தை மோதல் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
பாஜகவின் தில்லு முல்லு வேலைகள் தமிழக மக்களிடம் எடுபடவில்லை. இதனால் அந்த கட்சியால் நேரடியாக தமிழக மக்களின் ஆதரவை பெற முடியவில்லை. இதனையடுத்து தான் அதிமுகவை பணிய வைத்து பாஜக தமிழ்நாட்டில் நுழைய பார்க்கிறது, பாஜகவுக்கு அதிமுக என்ற அடிமை கிடைத்துள்ளது,
பாஜகவிடம் அதிமுக உள்வாடகை- உதயநிதி
இதனையடுத்து தான் அதிமுகவை பாஜகவிடம் உள் வாடகைக்கு எடப்பாடி பழனிசாமி விட்டுள்ளார். தற்போது பழைய அடிமை போதாது என்று இன்றைக்கு புது புது அடிமைகளை பாஜக தேடி வருகிறது. எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என உதயநிதி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மொடக்குறிச்சி தொகுதியில் மக்கள் மத்தியில் பேசிய போது உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. ஆனால் திமுக அவர்களுடைய குடும்பத்துக்காக இருக்கும் கட்சி. கட்சிக்கு உழைக்கின்றவர்கள் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும். ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அதிமுக. குடும்பக் கட்சியான திமுகவை வீழ்த்தும் தேர்தல் தான் 2026 தேர்தல்.
பால்டாயில் எல்லாம் பேசுது- எடப்பாடி பழனிசாமி
கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? பதவி அவர்களுக்கு பட்டா போட்டு வைக்கப்பட்டிருக்கிறதா..? அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம், பொதுச்செயலாளர் கூட ஆகலாம். திமுகவில் வரமுடியுமா? அப்படிப் பேசினால் கட்டம் கட்டிவிடுவார்கள். மக்களுக்கு உழைக்கும் தலைவர்களாக எம்ஜிஆர் அம்மா இருவரும் இருந்தனர்.
அவர்களுக்கு வாரிசு கிடையாது மக்கள் தான் வாரிசு. உதயநிதி எப்ப வந்தாரு என்ன செய்தார்கள் என எல்லாருக்கும் தெரியும். இவர் கருணாநிதியோட பேரன், ஸ்டாலினுடைய மகன், வேறு என்ன உழைப்பு இருக்கு. திமுகவிற்கு என்ன உழைப்பு கொடுத்திருக்கிறார். இவர் பேசுகிறார் நம்மை பற்றி, பால்டாயில் எல்லாம் நம்மை பற்றி பேசுது என்ன செய்வது என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
