இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார். 

விவசாயிகளால் ஓரங்கட்டப்பட்டு அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் விதைகளை தேடிச் சென்று சேகரித்து 169 பழைய ரகங்களை கொண்டுவந்து நெல் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கி தமிழகம் கடந்தும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்தவர்  ஜெயராமன்.

பாரம்பரிய உணவால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்ற உயரிய நோக்கத்தில் சேகரித்து வழங்கினார். ஆனால் நோய் வரக்கூடாது என்று நினைத்தவருக்கு கொடிய புற்றுநோய் சிறுநீரகத்தில் வந்தது, இருப்பினும் தளர்ந்து விடாமல் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.

உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். இந்த தகவல் அறிந்து முழு மருத்துவச் செலவையும் நான் ஏற்கிறேன் என்று அதற்கான முன்பணத்தையும் மருத்துவமனைக்கு செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது மகன் படிப்பு செலவையும் ஏற்றார் என்பது பரவலாக அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியான செய்தி தான்.

ஆனால் அவரின் கடை நிமிடத்தில், கண்ணீருடன் தன்னுடைய நிறைவேறாத ஆசைகள் குறித்து நெருங்கிய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவருடைய உறவினர் ஒருவர் கூறுகையில்... "தற்போது தன்னுடைய உடல் நிலை நன்றாக இருந்திருந்தால் விவசாய நெல் பற்றி "பிலிப்பைன்ஸ்" நாட்டில் நடைபெற இருந்த மாநாட்டில் உரையாடி இருப்பேன். ஆனால் அதில் தன்னால் கலந்து கொள்ள வில்லை என்று வேதனை பட்டுள்ளார்.

அதே போல் இது வரை நடிகர் சிவகார்த்திகேயன், மற்றும் விஜய் சேதுபதி  ஆகிய நடிகர்கள் தனக்கு யார் என்றே தெரியாது. ஆனால் அவர்கள் தன்னை தேடி வந்து, நேரடியாக என்னை சந்தித்து..  என் மகன் படிப்பு செலவை ஏற்றது மட்டும் இன்று, அவனை இறுதிவரை நன்றாக பார்த்து கொள்வேன் என வாக்குறுதி கொடுத்தது என்னால் மறக்கவே முடியாது என கண்ணீருடன் கூறினாராம்.

மேலும் நெல் ஜெயராமனுக்கு தீராத ஆசைகளில் ஒன்றாக இருந்தது "விவசாயிகளின் நெல் வகைகளில் மற்றும் கீரை வகைகளை சென்னையில் மாதம் இரண்டு முறை சந்தை வைத்து அதில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதாம். அதேபோல் மாவட்டம் தோறும் உழவர் சந்தைகள் இருப்பது போல் சென்னையிலும் இருக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.