திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நாளை நடைபெறுவதையொட்டி நகரின் காவல் தெய்வங்களான துர்க்கையம்மன், பிடாரியம்மனுக்கு உற்சவங்கள் நடைபெற்றன.

சிவனின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் புகழ் பெற்றது.

இந்தத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தம் பல இலட்சக்கணக்கில் அடியார்கள் வருவர். இந்தாண்டுக்கான தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதனையொட்டி திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வங்களான துர்க்கையம்மன், பிடாரியம்மன் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை இரவு துர்க்கையம்மன் உற்சவம்  கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெருவில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு திங்கள்கிழமை மாலை சிறப்பு வழிபாடு, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவு 9 மணிக்கு காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், வான வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளை வலம் வந்த அம்மன் நள்ளிரவில் மீண்டும் கோயிலை வந்தடைந்தார்.

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை அருணாசலேசுவரர் கோயில் கொடிமரம் எதிரே உள்ள பிடாரியம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 9.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பிடாரியம்மன், மாட வீதிகளில் வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற இரண்டு உற்சவங்களிலும் ஏராளமான அடியார்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர்.

பத்து நாள்கள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் தலைமையிலான ஊழியர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.