The three arrested including the driver of the Kottivandha lorry in Dindigul other district drainage bags.
திண்டுக்கல்

மற்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறை கழிவுகளை மூட்டை மூட்டையாக லாரிகளில் ஏற்றிவந்து திண்டுக்கல்லில் கொட்டவந்த ஓட்டுநர் உள்பட மூவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் சாயப்பட்டறைகள் அதிகளவில் செயல்படுகின்றன. இந்த சாயப்பட்டறைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதால் அங்குள்ள சாயப்பட்டறைக் கழிவுகளை வெளி மாவட்டங்களுக்குக் கொண்டுச் சென்றுக் கொட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது தவறு மற்றும் நிலத்தடி நீரை பாதிக்கும் செயல் என்பதால் அதனை திருட்டுத்தனமாக செய்கின்றனர் சாயப்பட்டறைக்கு சொந்தக்காரர்கள்.
அதன்படி, திண்டுக்கல் அருகே தோமையார்புரம், சவேரியார்பாளையம், நத்தம் சாலை பகுதிகளில் குளங்கள், திறந்தவெளிப் பகுதிகளில் சாயப்பட்டறை கழிவுகள் அடிக்கடி கொட்டப்பட்டு வந்தன. பெரும்பாலும், நள்ளிரவுக்குப் பின்னர் லாரிகளில் கொண்டுவந்து கழிவுகளை கொட்டுகின்றனர். எனவே, மக்கள் சாயப்பட்டறை கழிவுகளை ஏற்றிவரும் லாரிகளை கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே திண்டுக்கல் - தேனி சாலையில் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் ஒன்று திறந்தவெளியாக கிடக்கிறது. இதைப் பயன்படுத்தி கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமார் 100 டன் அளவுக்கு சாயப்பட்டறைக் கழிவுகளை லாரியில் கொண்டுவந்து மர்ம கும்பல் கொட்டிச் சென்றது. இதனைத் தொடர்ந்து நிலத்திற்குள் வாகனங்கள் வராதபடி ஆங்காங்கே பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சாயப்பட்டறை கழிவுகள் மூட்டைகளை ஏற்றிய லாரி, அங்கு வந்துள்ளது. அந்த லாரி தனியார் நிலத்திற்குள் செல்ல முயன்றபோது பள்ளத்தில் சக்கரம் இறங்கியதால் லாரி செல்ல முடியாமல் திணறியது.
அதேநேரம் சந்தேகப்படும் வகையில் தனியார் நிலத்தின் அருகே லாரி நிற்பதைப் பார்த்து, அந்த வழியாகச் சென்றவர்கள் அங்கு விரைந்தனர். இதனையடுத்து லாரியை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டுநர் உள்பட மூவர் தப்பியோடினர்.
இதுபற்றி திண்டுக்கல் தாலுகா காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாலுகா ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதனையடுத்து சாயப்பட்டறைக் கழிவுகளை ஏற்றிவந்த லாரி ஓட்டுநரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மோகன் (44), இடைத்தரகர்களான திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ரகுராமன் (35), ஜான்பால் (34) ஆகியோரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மேலும், சாயப்பட்டறை உரிமையாளர் உள்பட மூவரை பிடிக்க காவலாளர்கள் திருப்பூர், ஈரோடு பகுதிக்குச் செல்கின்றனர்.
