The ten days farmers struggle ended Crop Insurance Sum Assured

தூத்துகுடி

கோவில்பட்டியில் கடந்த பத்து நாள்களாக நடந்துவந்த விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டம் முடிவுக்கு வந்தது. விவசாயிகள் பயிர் காப்பீடு தொகையை இந்த மாதத்திற்குள் தருவதாக ஆட்சியர் அறிவித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

கடந்த 5-ஆம் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தேதி இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை திரும்பப் பெற்று, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் தினமும் பல்வேறு நூதனப் போராட்டங்களை அரங்கேற்றினர். 10–வது நாளான நேற்றைய விவசாயிகளின் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் கீதா, காளிராஜ், நவநீதகிருஷ்ணன், அழகர்சாமி, பகத்சிங் மன்ற தலைவர் உத்தண்டராமன், மாவட்ட காங்கிரஸ் துணை செயலாளர் முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், மதியம் மாநிலத் தலைவர் நாராயணசாமி பேசியது:

“கடந்த 2015 – 2016–ஆம் ஆண்டு பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்கவும், 2016 – 2017–ஆம் ஆண்டு பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்தியவர்களுக்கு மகசூல் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்று, காத்திருக்கும் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். பயிர் காப்பீட்டுதொகை வழங்குவதில் முறைகேடு நிகழ்ந்தால் மத்திய, மாநில அரசின் பிரதிநிதிகளின் வீடுகளின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என்று பேசினார்.

இதன்னையடுத்து கடந்த 10 நாள்களாக நடந்த காத்திருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. விவசாயிகள் அனைவரும் அமைதியாக அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.