இராஜபாளையம்,

தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தள் மலர்களை அழியா வண்ணம் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராஜபாளையத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் செங்காந்தள் மலர்கள் அதிகம் காணப்படும். இவை கார்த்திகை மாதங்களில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை. இதனை கார்த்திகைப்பூ எனவும், கண்வலிக்கிழங்கு எனவும் அழைப்பர். இது தமிழ்நாட்டின் மாநில மலராகவும், ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் இருக்கிறது.

துளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறம் முதலில் பச்சையாகவும், பிறகு செம்மஞ்சள், வெளிர் சிவப்பு அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக் கொண்டேயிருக்கும். பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் வெண்காந்தள், செங்காந்தள் என வர்ணிக்கப்படும். கிழங்கு பிளந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும், கணுக்களிலில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் முனை சுருண்டு காணப்படும். இதன் வேர் நச்சுத்தன்மை கொண்டது. இதன் கிழங்கு கலப்பை வடிவமானது. அதனை நேரடியாக உட்கொள்ளக் கூடாது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும் அபாயம் உள்ளது.

இவற்றில் உள்ள மருந்து பொருள் வாதம், மூட்டுவலி, தொழுநோய் ஆகியவற்றை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இக்கிழங்கால் பாம்பின் நஞ்சு, முறியும்.

இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் செம்மண் நிறைந்த இடங்களில் செங்காந்தள் மலர்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. தற்போது அவை பூத்துக் குலுங்கத் தொடங்கி உள்ளன. அழிந்து வரும் தாவரங்கள் பட்டியலில் உள்ளதால் இதனை சிசுவளர்ப்பு மூலம் உருவாக்கி பாதுகாத்திட ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

தமிழக மலரான இம்மலரை அழியா வண்ணம் காக்க அரசும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.