உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில் அது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உணவகங்களில் புகைப்பிடிக்க தடை

உணவங்களில் உணவு சாப்பிட வருபவர்கள் வசதிக்காக புகைப்பிடிக்கும் ( Smoking Room ) அறையானது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட்டது. ஆதே நேரத்தில் உணவு விடுதிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவு வருவதாலும், புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல் ஓட்டல்களில் புகைப்பிடிக்கும் அறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே புகைப்பிடிக்கும் அறையை ( Smoking Room ) அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றப்பட்டது. இதனையடுத்து அந்த சட்டத்தை தற்போது தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசிதழ் வெளியிட்ட தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகைக்குழல் கூடம் எங்கும் திறக்கப்பட கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகைக்குழல் கூடத்தில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்யும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி உணவு விடுதிகளில் புகைக்குழல் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தமிழக அரசு தெவித்துள்ளது.