தமிழக பட்ஜெட்டில் மக்களின் முன்னேற்றம் அரசின் முன்னேற்றம் இரண்டும் இருக்கும் எனவும் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட அனைத்து ஷரத்துகளும் இருக்கும் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி 8 ஆம் தேதி ஆளுநர் உரையோடு தொடங்கியது. 

அதைத் தொடர்ந்து 4 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று சட்டப் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 15 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை அரங்கில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாகவும் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழக பட்ஜெட்டில் மக்களின் முன்னேற்றம் அரசின் முன்னேற்றம் இரண்டும் இருக்கும் எனவும் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட அனைத்து ஷரத்துகளும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.