இரும்பை முதலில் கண்டுபிடித்த தமிழர்கள்.. அன்று இரும்புக்கு அடுத்த உலோகம்தான் தங்கம்.. குவியும் ஆதாரங்கள்!
தமிழ் சமூகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியிருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் கூறியிருந்த நிலையில், இரும்பு குறித்து 50-க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழ் சங்க இலக்கியங்களில் இருப்பதாக எழுத்தாளர் இரா. மன்னர்மன்னன் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய, "கடந்த ஆண்டு, தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் மற்றும் வாழ்விட பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாறை ஓவியங்கள், புதிய கற்கால கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விட பகுதியில் 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பகுப்பாய்வின் காலக் கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே கி.மு.1615 மற்றும் கி.மு.2172 என்று காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித இனம் இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான், அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை இன்றைக்கு கிடைத்திருக்கிறது. மேலும், இந்தியாவில் இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடகம் உள்ளிட்ட 28 இடங்களில் இதுவரை ஏ.எம்.எஸ். என்று சொல்லப்படுகின்ற காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகளான, 4,200 ஆண்டுகளுக்கு என்பதே, காலத்தால் முந்தியது என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கத்தக்க செய்தியாகும். அதேபோன்று, கருப்பு-சிவப்பு பானை வகைகள் 4.200 ஆண்டுகளுக்கு முன்னரே அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இரும்பு பற்றி பல அரிய கருத்துகளை ‘ஆயுததேசம்’ நூலில் எழுதியுள்ள எழுத்தாளர் இரா. மன்னர்மன்னனிடம் ‘ஏசியாநெட் தமிழ்’ பேசியது. “இரும்பையும் கல்லையும் பயன்படுத்திய காலம் புதிய கற்காலம் என்று பெயர். செம்பு காலம், வெண்கல காலம், இரும்புக் காலம், பின்னர் உள்ள காலம் வரலாற்றுக் காலம். உலகிலேயே முதன் முதலில் இரும்பு என்ற சொல் அறிமுகமானது கி.மு. 600 - 700 காலகட்டத்தில்தான். சில பகுதிகளில் அரிதாக கி.மு. 1200-இல் தெரிந்திருக்கிறது. கி.மு. 2500-இல் தமிழை அறிந்திருந்த ஒரே இனம் தமிழ் இனம்தான். ஐரோப்பிய ஆய்வாளரான பேராசிரியர் ஹவ்லாங் என்ன சொல்கிறார் என்றால், ‘உலகிலேயே இரும்பை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் என்று கூறியிருக்கிறார். ஆதிமனிதர்களாக இருந்தபோது தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். கண்டுபிடித்த பிறகு இரும்போடு சுண்ணாம்பை கலந்து அதை சமன்படுத்தும் முறையையும் தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்றும் ஹவ்லாங் சொல்கிறார். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியபோது, தமிழர்கள் இரும்பு உபயோகப்பத்தியது குறித்த ஆச்சரியமடைந்து கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி நிறைய குறிப்புகள் உள்ளன.
மன்னர்மன்னன்கி.மு. 1300-இல் தமிழகத்தில் புத்தூர் பகுதியில் இரும்பு உருக்காலைகள் இருந்திருக்கின்றன. இன்றுவரை தொல்லியல் சான்றுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. மற்றவர்கள் எல்லாம் இரும்பு என்ற சொல்லை அறிவதற்கு முன்பே நாம் இரும்பு உருக்காலை வைத்திருந்திருக்கிறோம். இரும்புக்கு மூன்று மூலப் பொருட்கள் இருக்கின்றன. தேனிரும்பு என்பது தரமானது. மெல்லிரும்பு, உருக்கிரும்பு, வார்பிரும்பு என்று மூன்று வகைகள் உள்ளன. மெல்லிரும்பு என்பது கார்பன் மிகவும் குறைவாக இருக்கிற இரும்பு. வார்பிரும்பில் கார்பன் அதிகமாக இருக்கும். சரியான அளவில் இருப்பது உருக்கிரும்பு. இது சுலபாமக துருப்பிடிக்காது. இதில் செய்யும் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
தேனிரும்பு என்பது சேலம் பகுதிகளில் அதிகம் கிடைக்கத் தொடங்கியது. ஒரு இரும்பு கிடைக்கிறது. கிடைக்கும் இரும்பில் கார்பனை நீக்க வேண்டும். அதற்கு சுண்ணாம்பு தேவை. சேலத்தில் சுண்ணாம்பும் இயற்கையாகவே அதிகம் கிடைத்தது. அங்கெல்லாம் ஆய்வு செய்து வார்பிரும்பை எப்படி செய்வது என்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் உருக்கிரும்பு என்ற சொல்லே தமிழிலிருந்து வந்த சொல்தான். சமஸ்கிருதத்தை இந்தியாவின் அறிவுக் களஞ்சியம் என்று சொல்கிறார்கள் அல்லவா? அந்த மொழியில் இரும்பு என்பதற்கு சொல்லே கிடையாது. எனவே, சமஸ்கிருதம் உரிமை கொண்டாடாத சொல்லாக தமிழ் இருந்திருக்கிறது. இரும்பு தென்னிந்தியாவில்தான் உருவானது என்பதற்கு நிறைய வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன.
இலக்கிய சான்றுகளிலும்கூட ஆதாரங்கள் இருக்கின்றன. சங்க இலக்கியங்களில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை ‘இரும்பு ஈருவடி’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோல இரும்பை அடிக்கிற உலை பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன. இரும்பை நுட்பமாக அறிந்த சமூகமாக தமிழ் சமூகம் இருந்திருக்கிறது, வேறு எங்கும் இரும்பு பற்றிய நிறைய சொற்கள் இருந்தது கிடையாது. சங்க இலக்கியங்களில் இரும்பினால் செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பொருட்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 50-க்கும் மேற்பட்ட இரும்பு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பெயர்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
இப்போது நாம் பார்க்கிற இரும்பு என்பது வேறு, 17-ஆம் நூற்றாண்டு வரை இரும்பு என்பது மிக முக்கியமான உலோகம். ஒட்டுமொத்த அரசியலையே முடிவு செய்கிற உலோகமாக இரும்பு இருந்திருக்கிறது. இன்று உலகப் பணக்காரர்கள் என்கிறோம் அல்லவா? மூன்றாம் ஆப்ரஹாம் என்பவரால்தான் இங்கிலாந்து பணக்கார நாடாக ஆனது. இவருடைய தாத்தா முதலாம் ஆப்ரஹாம் இரும்பு உருக்கும் வேலையைத்தான் பார்த்திருக்கிறார். இரும்போடு நிலக்கரியைப் போட்டு உருக்கும்போது சுலபத்தில் உருக்க முடிகிறது என்பதை மூன்றாம் ஆப்ரஹாம்தான் கண்டுபிடித்தார். இந்த முதலாம் ஆப்ரஹாமிடம் ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கு இரும்பு பாலங்கள் வேண்டும் என்று குவிந்தார்கள்.
அப்போது அவர், ‘உங்க பணத்தை இங்கு மாற்ற முடியாது. நீங்களே இங்கிலாந்து பணத்துக்கு மாற்றிக்கொடுங்கள்’ என்று சொல்கிறார். இதன் பிறகுதான் இங்கிலாந்தில் பவுண்ட் உருவாக்கப்பட்டு ஐரோப்பிய பணமாக மாறுகிறது. அதன் மூலம் இங்கிலாந்து பணக்கார நாடாகவும் வல்லரசு நாடாகவும் மாறுகிறது. இந்த உலகத்தில் முதல் பணக்காரரை உருவாக்கிய உலோகம் என்று இரும்பைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மிக முக்கியமான உலோகம் இரும்பு. அலெக்ஸாண்டர் பயன்படுத்திய முக்கியமான போர்க் கருவிகளில் ஈட்டி மிக முக்கியமானது. 21 அடி மரத்தால் செய்யப்பட்ட ஈட்டியில் நுனியில் மட்டும் இரும்பு வைத்திருந்தார். அப்போது இரும்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதால் அந்த அளவில்தான் பயன்படுத்த முடிந்தது.
அலெக்ஸாண்டருக்கும் போரஸ்ஸுக்கும் போர் உடன்பாடு ஏற்பட்டது என்பதையெல்லாம் படித்திருக்கிறோம். அப்போது அலெக்ண்டாருக்கு போரஸ் ஒரு பரிசு கொடுத்தார். அது 30 பவுண்ட் இரும்பு. அதாவது 13.6 கிலோ இரும்பு. அந்த இரும்பை மகிழ்ந்து வாங்கும் நிலையில் அலெக்ஸாண்டர் இருந்தார். ஏனெனில், அவரிடம் அப்போது இரும்பு இல்லை. அப்போது இரும்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரிய உலோகம். இன்னும் சொல்லப்போனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்கு அடுத்த உலோகமாகத்தான் தங்கம் இருந்தது. அந்தக் காலட்டத்தில் மிகப் பெரிய அரசர்கள் வாள் செய்வதற்கு இரும்பு கிடைக்காத நிலையில் இருந்தபோது தமிழகத்தில் வருவோர் போவார் எல்லாம் இரும்பால் செய்யப்பட்ட வாள் வைத்திருந்தார்கள்.” என்று மன்னர்மன்னன் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.