மதுரை

அரசுப் பணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக கணினி மயமாகிறது என்று கருவூலகணக்குத் துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் பேசினார்.

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினி மயமாக்குதல் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மதுரை மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

இதற்கு ஆட்சியர் வீரராகவராவ் முன்னிலை வகித்தார். கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர், ஆணையர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியது: “நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப்பட்டியல் ஏற்பளிக்கும் முறை, இணைய தள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.288.91 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 23600–க்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும்.

சுமார் 9 இலட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும்.

அரசுப் பணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினி மயமாகிறது.

தமிழ்நாடு அரசின் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியர்களுக்கான அடையாள அட்டை அரசு இ.சேவை மையங்கள் மூலம் விரைவில் வழங்கப்படும்” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், துணை காவல் ஆணையர் ஜெயந்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஞ்சித்சிங் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.