திருப்பூர்,

பெட்ரோலிய வணிகர்களுக்கு வழங்க வேண்டிய விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

பெட்ரோலிய வணிகர்கள் தங்களுக்கு தர வேண்டிய விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்க எண்ணெய் நிறுவனங்களை கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர். இதற்காக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக கடந்த மாதம் 19 மற்றும் 26–ஆம் தேதிகளில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் விற்பனை நிலையங்களின் விளக்குகளை அணைத்து விற்பனை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: “எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யாமல் தொடர் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடத்துவது, மாதத்தின் 2 மற்றும் 4–வது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனையை நிறுத்துவது, நாளை (சனிக்கிழமை) முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்குவது, மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை நிலையங்களில் தங்களது மொத்த விற்பனையையும் நிறுத்துவது.

அதுபோல் நாளை முதல் பெட்ரோல் பங்குகளில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் நிறுவனங்களின் சின்னங்களில் உள்ள விளக்குகளை அணைத்து வைப்பது என்பன போன்ற போராட்டங்களை நடத்தவுள்ளோம்.

இந்த தொடர் போராட்டத்தினால் பொதுமக்கள் உள்பட வாடிக்கையாளர்கள் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தங்கள் வாகனங்களுக்கு முன்னதாகவே பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.