தஞ்சாவூர்

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று தன்னார்வ, சேவை, நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவினர் 24-வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் தன்னார்வ, சேவை, நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவினர் 24-வது நாளாக நேற்று தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மத்திய, மாநில அரசுகள் பரிந்துரையின்படி செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பட்டயக் கணக்காளர் சங்கத் தலைவர் தமிழ் ஐயா தலைமை வகித்தார். வரி ஆலோசகர் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜெயகுமார், மாவட்டத் தலைவர் மோகன், மூத்தக் குடிமக்கள் பேரவை மாவட்டத் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன், இணைச் செயலர் தஞ்சை ராமதாஸ், வழக்குரைஞர்கள் வெ. ஜீவகுமார், கோ.அன்பரசன், எக்ஸ்னோரா கலியபெருமாள், வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலர் ராமசந்திரசேகரன், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.