நெல்லை,
சல்லிக்கட்டு நடத்தக்கோரி நெல்லை மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு கடைகளை அடைத்து வியாபாரிகளும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று வலிமைப் பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
களக்காடு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கோட்டை பகுதியில் சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். மருந்து கடைகள், ஓட்டல்களும் மூடப்பட்டதால் சந்தை வெறிச் சோடி காணப்பட்டது. ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுபவர்களும் தங்கள் வேலையை நிறுத்திவிட்டு சல்லிக்கட்டுக்கு ஆதரவுத் தெரிவித்தனர்.
2000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் ஏர்வாடி கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பிரதான சாலை வழியாக வந்து பேருந்து திருப்பம் பகுதியில் ஊர்வலம் முடிவடைந்தது.
இந்த போராட்டத்திற்கு காளை மாடுகளையும் கொண்டு வந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஏர்வாடியை அடுத்த மலையடிப்புதூர் கிராம மக்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு சல்லிக்கட்டை அவசர சட்டத்தின் மூலம் நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தின் போது வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், ஆம்பூர், தென்காசி, பாவூர்சத்திரம், சுரண்டையில், பணகுடி, இட்டமொழி, திசையன்விளை, வடக்கன்குளம், பனவடலிசத்திரம்-சிவகிரி, செங்கோட்டை, வடகரை, ஆலங்குளம், மானூர் ஆகிய பகுதிகளிலும் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு சல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்தும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களை நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்நிய நாட்டு குளிர்பாங்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.
