தூத்துக்குடி

தூத்துக்குடியில், விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பதாக இருந்தால் அதற்கான விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்த விதிமுறைகள் என்னவென்றும் மாநகர டி.எஸ்.பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுடன் காவல்துறையினர் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநகர காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமை தாங்கினார். காவல் ஆய்வாளர்கள் பௌல்ராஜ் (கிழக்கு), ராஜேஷ் (மேற்கு), ஜூடி (நாலாட்டின்புத்தூர்), உதவி ஆய்வாளர்கள் மணி (கயத்தாறு), வீரபாகு (கழுகுமலை), ஆர்தர் ஜஸ்டின்சாமுவேல்ராஜ் (கொப்பம்பட்டி) மற்றும் கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றிய, நகர இந்து முன்னணி நிர்வாகிகள், அகில பாரத இந்து மகா சபா அமைப்பு நிர்வாகிகள், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், “விநாயகர் சிலைகளை விதிமுறைகளுக்கு உள்பட்ட உயரத்தில் அமைக்க வேண்டும்.

போக்குவரத்திற்கு இடையூறின்றி ஊர்வலம் செல்ல வேண்டும். 

விநாயகர் சிலை வைக்குமிடத்தில் மேற்கூரை ஓலையால் வேயப்படாமல்,  அஸ்பெஸ்டாஸ்  கூரையில் அமைக்க வேண்டும். 

ஊர்வலத்தின்போது, பிற மதத்தைக் கண்டித்தும், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பக் கூடாது. 

ஊர்வலத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி கிடையாது.

பாரம்பரிய களிமண் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி உண்டு. 

விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் காவல் துறையுடன் விழா குழு அமைப்பாளர்கள் உடனிருந்து, சிலைகளுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கடந்தாண்டு கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கழுகுமலை, நாலாட்டின்புத்தூர், கயத்தாறு, இளையரசனேந்தல் உள்ளிட்ட காவல் துறை எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும்” போன்ற விதிமுறைகள் போடப்பட்டன.

இந்த விதிமுறைகள் அனைத்தையும் விநாயகர் சதுர்த்திக்கு பின்பற்ற வேண்டும் என்றும், பின்பற்ற தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.எஸ்.பி முருகவேல் தெரிவித்தார்.