The Sri Lankan navy again is atrocious Attacking the fishermen of Tamil Nadu and cutting the nets ...

இராமநாதபுரம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கியும், படகுகளில் இருந்த வலைகள், உபகரணங்களை சேதப்படுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் மீனவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகள், மீன்பிடி உபகரணங்களை அனைத்தையும் வெட்டி கடலில் வீசியுள்ளனர்.

இலங்கை கடற்படை ஏற்படுத்திய இந்த சேதத்துக்கு படகு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களும் தாக்கப்பட்டதால் மிகுந்த வருத்தத்துடன் அவர்கள் கரைக்குத் திரும்பினர்.

கடலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியது:

"இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவத்தால் மீன்பிடித் தொழில் அழிந்து வருகிறது.

மேலும், மத்திய அரசின் அலட்சிப் போக்கால்தான் இலங்கை அரசு அத்துமீறி செயல்பட்டு வருகிறது.

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.