திருப்பூரில் பாம்புகளை குடியிருப்புப் பகுதிகளுக்குள் விட்டு பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற மூன்று பேரை வனத் துறையினர் பிடித்தனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலை, செட்டிபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் அதிக அளவில் பாம்புகள் வந்துள்ளன. அவற்றைப் பிடித்து வனப் பகுதியில் விட குடியிருப்புவாசிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக பாம்பு பிடிக்கும் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பாண்டி, கண்ணன், முருகன் ஆகிய மூன்று பேரை பொதுமக்கள் அழைத்து வந்து, குடியிருப்புப் பகுதிகளில் இருந்த பாம்புகளைப் பிடித்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை முதல் அவர்கள் பாம்பு பிடித்துள்ளனர். இதனிடையே, பிடித்த பாம்புகளை மீண்டும் குடியிருப்புகளுக்குள் விட்டு 100 பாம்புகள் வரை பிடித்ததாக பொதுமக்களிடம் கணக்குத் தெரிவித்து உள்ளனர்.

அதன்படி, ஒரு பாம்புக்கு ரூ. 150 வீதம் பணம் தர பொதுமக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சிலர் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வனச் சரகர் எஸ்.மகேஷ் தலைமையிலான வனத் துறையினர், பாம்பு பிடித்தவர்களைப் பிடித்து விசாரித்ததில் பாம்புகளைக் குடியிருப்புகளுக்குள் விட்டு பணம் பறிக்கத் திட்டமிட்டது தெரிந்தது.

தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 25 பாம்புகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இப்பாம்புகள் அனைத்தும் அமராவதி வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.