கரூர்

கரூரில் பேருந்திற்கு கூண்டு கட்டும் நிறுவனத்திற்குள் புகுந்து காவலாளியைத் தாக்கிவிட்டு மினிப் பேருந்தை கடத்திச் சென்ற இரு இளைஞர்களைப் காவலாளர்கள் கைது செய்தனர். மேலும், மினி பேருந்து உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் மீட்டனர்.

கரூர் மாவட்டம், தாந்தோணி மலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (49). இவர் ஆண்டாங்கோவில் பேருந்து நிறுத்தம் எதிரே பேருந்திற்கு கூண்டு கட்டும் நிறுவனம் வைத்துள்ளார். இங்கு கரூரைச் சேர்ந்த குமார் (60) என்பவர் காவலாளியாக வேலைப்பார்க்கிறார்.

இந்த நிலையில் கூண்டு கட்டும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு இளைஞர்கள், காவலாளி குமாரை சரமாரியாக தடியால் தாக்கிவிட்டு, உள்ளே இருந்த மினி பேருந்து மற்றும் லீவர், ஜாக்கி உள்ளிட்ட ரூ.10 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

கரூர் நகர காவல்நிலையத்தில் இவரளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் மினி பேருந்து நிற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மினி பேருந்தை கடத்தியவர்கள் கரூர் பெரியாண்டாங்கோவில் ஜீவா நகரைச் சேர்ந்த நல்லதம்பி மகன் சதீஷ்குமார் (23), திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த தளபதி (26) என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்களிடமிருந்த மினி பேருந்து, லீவர், ஜாக்கி ஆகியவற்றைக் காவலாளர்கள் மீட்டனர். அவர்களையும் கைது செய்தனர்.

சினிமா பானியில் காவலாளியை அடித்துப் போட்டுவிட்டு மினி பேருந்திய லவட்டிக் கொண்டு சென்ற சம்பவத்தால் அங்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.