பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாகவும் லாரிகள் ஓடாததால் அரியலூரில் சிமெண்ட் வர்த்தகம் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கிறது.

“பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், லாரிகளுக்கான காப்பீட்டு தொகை உயர்வு திரும்ப பெற வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டு உள்ள பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழகம் முழுவதும் கால்வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிக்கிறது. இதனால் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.

சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள், சிமெண்டு ஏற்றி வந்த லாரிகள் உள்ளிட்டவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லாரி புக்கிங் பணியை நிறுத்தியதால் அரியலூர் மாவட்டத்தில் வர்த்தகம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், சிமெண்ட் உள்ளிட்டவைகளின் விலையும் கிடு கிடுவென உயரும் நிலையில் இருக்கிறது.