Asianet News TamilAsianet News Tamil

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவர்கள் போராடியதால் பரபரப்பு…

The school bus is imprisoned for school students
The school bus is imprisoned for school students
Author
First Published Aug 12, 2017, 6:35 AM IST


திருநெல்வேலி

பாவூர்சத்திரத்தில் மாலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் அரசு பேருந்தைச் சிறைபிடித்துப் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மேலப்பாவூர், திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, மேலப்பாட்டாக்குறிச்சி உள்பட பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பேருந்துகளில்தான் பள்ளிக்கு வந்துச் செல்கின்றனர். அரசு வழங்கியுள்ள இலவச பேருந்து பயண அட்டை வைத்துள்ள மாணவர்கள் அதன்மூலம் அரசு பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.

காலையில் பள்ளிக்கு வருவதற்கு போதிய பேருந்துகள் இருந்தபோதிலும், மாலையில் சரிவர பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் மேலப்பாவூரில் இருந்து சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி வழியாக தென்காசிக்குச் செல்லும் அரசு பேருந்து புறப்படத் தயாரானது. உடனே அங்கிருந்த மக்கள் அந்த பேருந்தை வழிமறித்து, பள்ளி முடிவதற்குள் ஏன் பேருந்தை எடுக்கிறீர்கள்? என்று வாக்குவாதம் செய்தனர். அதற்குள் பள்ளிக்கூடம் முடிந்து மாணவ, மாணவிகள் அங்கு வந்தனர். அவர்களும் அந்த பேருந்தைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறியது: “கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இந்த பேருந்து மாலை 4.10 மணிக்கு மேலப்பாவூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் பள்ளி முடிந்து நாங்கள் ஊர்களுக்குச் செல்ல வசதியாக இருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக அந்த பேருந்து மாலை 4 மணிக்கே புறப்பட்டுச் சென்றுவிடுகிறது. இதனால் நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இது தொடர்பாக நாங்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தோம். அவர்களும் மாலை 4.10 மணிக்கு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு முன்னதாக பேருந்தை எடுத்ததால் போராட்டம் நடத்தியுள்ளோம்” என்று கெத்து காட்டினர்.

இந்தப் போராட்டத்தையடுத்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios