The schedule for local elections should be submitted by August 1
உள்ளாட்சி தேர்தல் குறித்த உத்தேச அட்டவணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
ஆனால் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடியவில்லை எனவும், அனைத்து பணிகளும் முடிந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் அணையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசிற்கும் அறிவுறுத்தியது.
ஆனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சிரமம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த உத்தேச அட்டவணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்ததால் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம் எனவும் அரசிடம் பரிசீலித்து தேதியை அறிவிக்கிறோம் எனவும் தேர்தல் ஆணையம் பதிலளித்தது.
இதைதொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
