The sad sight of father son Vaigai Express crash kills father
திண்டிவனத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது நொடிப்பொழுதில் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் தந்தை தூக்கி வீசப்பட்டு பலியானார். அதனைப் பார்த்த மகன் அதிர்ச்சியில் உறைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பெரமண்டூர் அடுத்த நாரேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் நாராயணசாமி (80). இவர் நேற்று மதியம் தனது மகன் சம்பத்குமாருடன் திண்டிவனத்தில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக பேருந்து மூலம் திண்டிவனம் மேம்பாலம் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார்.
இருவரும் நேரு வீதியில் உள்ள வங்கிக்குச் செல்வதற்காக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். நாராயணசாமி முன்னதாக தண்டவாளத்தில் நடந்துச் சென்றார். சம்பத்குமார் பின்னால் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வைகை விரைவு இரயில் நாராயணசாமி மீது நொடிப்பொழுதில் மோதியது. இரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட நாராயணசாமி தண்டவாளத்தின் தடுப்புகட்டை அருகே அமர்ந்திருந்த வெங்கந்தூரை சேர்ந்த விவசாயி கருணாநிதி (55) என்பவர் மீது விழுந்தார். இதில், நாராயணசாமி பரிதாபமாக உயிரிழந்தார். விவசாயி கருணாநிதியின் வலது காலில் பெருத்த காயம் ஏற்பட்டது.
தனது கண் எதிரே தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்ததை பார்த்து சம்பத்குமார் அதிர்ச்சி அடைந்து, தந்தையின் உடலின் அருகேயே அமர்ந்து கதறி அழுதார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு இரயில்வே காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த கருணாநிதியை மீட்டுச் சிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.
இதற்கிடையே காவலாளர்கள், நாராயணசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்துகின்றனர்.
