the rules broken by police during protest
நேற்று தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம், தமிழக மக்கள் மத்தியில் கடும் கோபத்தை எழுப்பியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம். அதன் நச்சுக்கழிவுகளால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. என மக்கள் நலனுக்காக, தங்கள் வாழ்வுக்காக போராடிய அப்பாவி பொது மக்கள் மீது, அரசாங்கம் நடத்தியிருக்கும் இந்த துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது. என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
மக்கள் உயிரையே பலி வாங்கும் இது போன்ற அடக்கு முறை நடவடிக்கைகள், எந்த சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன? என்ற கேள்வி அனைவர் மனதிலும் தற்போது எழுந்திருக்கிறது.
.jpg)
ஒரு போராட்டக்குழுவை கலைக்க துப்பாக்கிச்சூடு ஒன்று தான் ஒரே வழியா? அதுவும் இவ்வளவு மூர்க்கமாக நடத்தப்படுமா? ஜனநாயக நாட்டில் மக்களுக்கு தங்கள் நலனுக்காக போராடக் கூட உரிமை இல்லையா? என மக்கள் மனதில் பல கேள்விகள் எழுந்திருக்கும் தருணம் இது.
இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இதற்கு முன்னும் பல முறை தமிழகத்தில் நடந்திருக்கின்றன. மெரினா கடற் கரையை அழகுப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, மின் கட்டணத்தை குறைக்கக் கோரி போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, அருப்புக்கோட்டை அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என போராட்டங்களின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்னும் நடைபெற்றிருக்கின்றன.
அப்போது எழுந்த கண்டனங்களை கருத்தில் கொண்டும், மனித உரிமை அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் விளைவாகவும் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான சில விதிகள் வகுக்கப்பட்டன.

மாப் ஆபரேஷன் எனப்படும் இந்த விதிமுறைகளின்படி, சட்ட விரோதமாக கூட்டப்பட்டிருக்கும் கூட்டத்தை கலைக்க என ஒரு முறை இருக்கிறது. முதலில் சட்டவிரோதமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்கு முன் 500 மீட்டர் தூரத்தில் காவல் படையினர் அணிவகுத்து நிற்க வேண்டும்.
முன்வரிசையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கையாளும் அணியினரும், அடுத்த 3 வரிசைகளில் ‘லத்தி சார்ஜ்’ அணியினரும், அடுத்த வரிசையில் குறைவான எண்ணிக்கையிலான துப்பாக்கி ஏந்திய அணியினரும் தாக்குதலுக்காக நிற்க வேண்டும்.
இறுதி வரிசையில் முதலுதவி அணியினர் மக்கள் பாதுகாப்பிற்காக நிற்க வேண்டும். காவல் அதிகாரி முன்னறிவிப்பாக மைக்கில் எச்சரித்து, எச்சரிக்கை கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அப்போது கூட்டம் கலைந்து போகாவிட்டால் கண்ணீர்ப் புகைகுண்டுகளைத் தரையில் படும்படியாக, 45 டிகிரி கோணத்தில் வீச வேண்டும்.
.jpg)
தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.. அதன் பிறகு லத்தி சார்ஜ் மூலம் கூட்டத்தை கலைக்க முயல வேண்டும். அப்போதும் நிலமையை சமாளிக்க முடியவில்லை என்றால் துப்பாக்கி அணியினர் இரண்டு வரிசையாக முன்னேறி, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பவேண்டும்
காவலர் ஒருவர் 5 அடி முன்னால் வந்து நின்று, துப்பாக்கிச்சூடு நடத்தப்போவது பற்றி மைக்கில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன் பிறகே அதிகாரி குறிப்பிட்ட ஒரு காவலரிடம், கூட்டத்தில் இருக்கும் முக்கிய நபர் ஒருவரை மட்டும் காலில் சுடும்படி உத்தரவிடுவார்.

அந்த நபர் சுடப்பட்டதும் கூட்டம் கலைந்து ஓடும் என்பது, காவல் துறையின் கணிப்பு. அப்போது கூட குண்டடி பட்டவருக்கு காவல் துறையில் இருக்கும் முதலுதவி அணியினர் ஓடிச்சென்று, முதலுதவி செய்ய வேண்டும்.
காவல் துறை ஒரு போராட்டக்கூட்டத்தை அடக்கும் போது கூட பொது மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது. அந்த வித உயிர் சேதமும் நிகழக்கூடாது. எனும் எண்ணத்திலேயே இது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் நேற்று நடந்த சம்பவத்தில் இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. அவ்வாறு பின்பற்றப் பட்டிருந்தால் இத்தனை உயிர்பலி நிகழ்ந்திருக்காது.
