திருவாரூர்

திருவாரூரில் மூடப்பட்ட சாராயக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அதனை எதிர்த்து வர்த்தர் சங்கம் மற்றும் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம், நகரப் பகுதியில் ஏற்கெனவே மூடப்பட்ட ஆறு சாராயக் கடைகள் வெள்ளிக்கிழமை இரவு திறக்கப்பட்டு மீண்டும் விற்பனையை தொடங்கியது.

இதனை அறிந்த மக்கள், பொதுநல அமைப்பினர், திமுக மற்றம் வர்த்தகச் சங்கத்தினர் சாராயக் கடைகளை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் பேருந்து நிலையம் ரௌண்டானா அருகில் விஜயபுரம் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், திறக்கப்பட்ட சாராயக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல பனகல் சாலையில் திறக்கபட்டுள்ள சாராயக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி திமுக சார்பில் நகரச் செயலர் எஸ்.பிரகாஷ் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது.

இதில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.ரஜினிசின்னா, பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாராயக் கடைகளுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.