புதுக்கோட்டை

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் குறித்து விசாரித்து வந்த புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறை பெண் அதிகாரி சசிகலா, திடிரென விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியான் அதிமுக சார்பில் பணம் வழங்கப்படுவதாக புகார் வந்ததால் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைப்பெற்றது.

அந்த சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம், அவற்றை பட்டுவாடா செய்யும் நிர்வாகிகளின் பட்டியலோடு சேர்ந்து சிக்கியது.

இந்த ஆவணங்களில் நான்கு பக்கம் கடந்த ஏப்ரல் 8–ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் அந்தத் துறையில் உள்ள புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறை பதிவாளர் சசிகலாவுக்கு வருமான வரித்துறையினர் கடிதம் எழுதியிருந்தனர். அதன்படி அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறை பதிவாளர் சசிகலா விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரியும், புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலமும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறை பதிவாளராக இருந்த சசிகலா திடீரென நேற்று விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்ததற்காக இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன.