கோயம்புத்தூர்

ஏர்செல் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்போன் சேவையில் பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெரும்பாலான செல்போன் கோபுரங்கள் இயங்காததால், ‘சிக்னல்’ கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் ஏர்செல் சேவையை பயன்படுத்துவோர் மற்றவர்களிடம் பேச முடி யாமலும், அழைப்புகளை ஏற்க முடியாமலும் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.

மேலும், செல்போன் மூலம் முக்கிய தகவல்கள், அவசர செய்திகள் பரிமாறப்படும் சூழ்நிலையில், ‘ஏர்செல்’ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

எனவே, சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள ஏர்செல் மையங்களுக்கு மக்கள் சென்று முறையிட்டனர். எனினும் முறையான விளக்கம் கிடைக்காததால் ஊழியர்களுடன் வாக்குவாதமும் நடந்தது.

‘ஏர்செல்’ சேவை முடங்கியதால் அந்த நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் சங்கரநாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அந்த பேட்டியில், "தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள 9000 செல்போன் கோபுரங்களில் வாடகை பிரச்சனையால் 6500 கோபுரங்களுடைய இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் 25 இலட்சம் வாடிக்கையாளர்கள் மற்ற செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

அதன்படி இன்று (நேற்று) மட்டும் 8 இலட்சம் பேர் விண்ணப்பித்துருக்கின்றனர். ஏர்செல் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும்" என்று அவர் கூறினார்