Asianet News TamilAsianet News Tamil

பினாமிகள் கூறுவதை அவர்களின் நிழல்கள் கூட நம்பாது… நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கணும்... புள்ளிவிவரங்களோடு அம்பலமாக்கும் அன்புமணி!

The policy decision about the closure is required
The policy decision about the closure is required
Author
First Published Jun 14, 2018, 3:34 PM IST


மூக்கறுபட்ட அரசு: ஸ்டெர்லைட் ஆலை  மூடல் பற்றி கொள்கை முடிவு தேவை என்ற தலைப்பில் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு புற்றுநோயை வெகுமதியாக வழங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை வலிமையாகவும், செல்லத்தக்கதாகவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கொடுத்த சாட்டையடி இதுவாகும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக தொடரப்பட்ட 15&க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்த போது தான் நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக வினா எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்த தமிழக அரசின் ஆணை வெளியான போதே இந்த கருத்தை நான் தெரிவித்திருந்தேன். இது தொடர்பாக மே 29&ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ஓர் ஆலையை மூடுவது எளிதான ஒன்றல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது Speaking order--க்கு இணையாக விரிவான காரணங்களை பட்டியலிட்டிருக்க வேண்டும். ஒரு பத்தியில் அரசாணை பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை. இதைக் காரணம் காட்டியே ஆலையை மூடியிருக்கலாம்’’ என்று கூறியிருந்தேன். ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்களையும் புள்ளிவிவரங்களுடன் நான் பட்டியலிட்டிருந்தேன். இப்போது உயர்நீதிமன்றமும் அதே கருத்தைக் கூறியிருப்பதன் மூலம் அரசின் துரோகம் அம்பலமாகியிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை மிகவும் பலவீனமானது என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதை பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய போதிலும், அதை ஆட்சியாளர்கள் நியாயப்படுத்தினார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டம் செல்லும் என்று சாதித்தார். அமைச்சரவையில் அனைத்துக்கும் கருத்துக் கூறும் உலகத்தர திறமையான இன்னொரு அமைச்சரோ, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை உலக நீதிமன்றத்திலும் செல்லுபடியாகும் என்று கூறினார். இவ்வளவையும் கூறிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டால் தங்களிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசு. அரசாணை மீது நம்பிக்கை இருந்தால் கேவியட் மனு தாக்கல் செய்வது ஏன்? என்ற வினாவுக்கு பினாமி ஆட்சியாளர்களிடமிருந்து இன்று வரை பதில் வரவில்லை.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. பினாமி அரசு பதவியில் நீடிக்கும் பட்சத்தில் நாளையே அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக பட்டியலிட்டு தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றலாம். அதனடிப்படையில் புதிய மூடல் ஆணையை பிறப்பிக்கலாம். அதுதான் சட்டப்படி செல்லத்தக்க நடவடிக்கையாக இருக்கும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தியே பழக்கப்பட்டுவிட்ட பினாமி அரசு அதை செய்யுமா என்பது ஐயமே.

காரணம்.... ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தமிழக ஆட்சியாளர்களின் நோக்கம் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில், அதனால் மக்களிடையே ஏற்பட்ட கோபத்தை குறைப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாகவே ஆலை மூடல் நாடகத்தை தமிழக அரசு நடத்தியிருக்கிறது. ‘‘நான் அடிப்பது போல அடிக்கிறேன்... நீ அழுவதைப் போல அழு’’ என்பதற்கிணங்கத் தான் மத்திய, மாநில அரசுகளும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகவும் ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதையை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது துரோகமாகும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பது உண்மை என்றால், அந்த ஆலைக்கு நிலங்கள் வழங்கப்பட்டதற்கான ஆணை ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு கட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கட்டிடங்களை அப்புறப்படுத்த அரசு தயாரா? அந்த நிலங்களை உடனடியாக கையகப்படுத்தி, கொல்லப்பட்டவர்களுக்கான நினைவிடத்தை அங்கு அமைக்கத் தயாரா? இவற்றை செய்யாமல் ஆலையை மூடிவிட்டதாக பினாமிகள் கூறுவதை அவர்களின் நிழல்கள் கூட நம்பாது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு அனுமதி இல்லை என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும். ஆலை ஊழியர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தருவதுடன், அவர்களின் மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios