கிருஷ்ணகிரி

சொத்துத் தகராறில் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்காததால் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். 

கிருஷ்ணகிரி மாவட்டம்,  காவேரிப்பட்டணம் காவல் நிலையத்துக்குள்பட்ட தேவமுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (32). 

இவருக்கும், இவரது உறவினருக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  

மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட  ஆட்சியர் ஆகியோரிடம் தனித்தனியே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மனமுடைந்த சிலம்பரசன், தனது பாட்டி புவியம்மாள் (70), தாய் லட்சுமி (50),  மனைவி சோனியா (28),  மகள் வனிதா (3) ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளர்கள்,  அவர்களைத் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.  

இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் காவலாளர்கள், அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சிலம்பரசனின் கோரிக்கையை ஏற்று சொத்துத் தகராறு தொடர்பாக வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.