தோகைமலை அருகே சட்டம் ஒழுங்கை மீறி செயல்பட்ட காவல்துறையைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.

கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டியில் உள்ள நங்கவரம் பிரிவு சாலையில் தோகைமலை காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் திங்கள்கிழமை மாலை வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர்.

மொபட், மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 50 பேருக்கு அபராதம் விதித்தனர். அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு இரசீது கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மணப்பாறை தாலுகா செல்லாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்–சரண்யா தம்பதியினர் தங்களது 5 மாத குழந்தையை காவல்காரன்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தனர்.

ரமேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். பின்னர் ரமேசிடம் குடிபோதையில் இருப்பதாக கூறி இருமுறை அவரை சோதனை நடத்தினர்.

பின்னர், குடிபோதையில் இருந்ததாக கூறி ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர் தான் குடிபோதையில் இல்லை என்று பலமுறை கூறினார். இருப்பினும் காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர்.

குழந்தையை மருத்துவமனை அழைத்துச் செல்வதே முக்கியம் என கருதியதால், ரமேஷ் அபராதம் செலுத்தினார். பின், அபராதம் செலுத்தியதற்கான இரசீதை தருமாறு ரமேஷ் கேட்டார். ஆனால், அவருக்கும் காவல்துறையினர் இரசீது தர மறுத்து விட்டனர்.

பின்னர் 1000 ரூபாயாவது தாருங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கெஞ்சி கேட்டுப் பார்த்தார். ஆனால், காவல்துறையினர் அவரை மிரட்டி அனுப்பி விட்டனர்.

இந்த காட்சியை பார்த்த காவல்காரன்பட்டி சந்தைக்கு வந்த பொது மக்கள் காவல்துறையினரைத் தட்டிக் கேட்டனர். காவலர்கள் என்றால் எதுவேண்டுமானலும் செய்யலாமா? இதுபோன்ற கொள்ளையில் ஈடுபடுவது காவல்துறையினரின் வேலையா? அல்லது கொள்ளையர்களின் வேலையா? என்று கேள்விக் கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்து மேலும் ஏராளமான பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அனைவரும் காவல்துறையினரின் சட்டம் ஒழுங்கு மீறலைக் கண்டித்து அங்கேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட கவுன்சிலர் விஜயன், முன்னாள் கவுன்சிலர் லதா மேலும் பலர் அங்கு வந்தனர். அவர்கள் அத்துமீறிய காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் காவல்துறையினரிடம் இருந்து ரமேஷுக்கு ரூ.2 ஆயிரத்தை மட்டும் வாங்கி கொடுத்து, காவல்துறைக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், காவல்துறையினரை மன்னித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக இரவு 7 மணி முதல் 8.20 மணி வரை திருச்சி –தோகைமலை சாலையில் போக்குவரத்து பாதித்தது.