The police took the Tashwant to the court.
சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி பாபு என்பவரின் மகளான ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றான்.
இதுகுறித்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தான்.
பின்னர் நகைக்காக பெற்ற தாயையே கடந்த வாரம் கொலை செய்துவிட்டு அவன் மும்பைக்கு தப்பிச் சென்று விட்டான். இதையடுத்து மும்பை சென்ற தனிப்படை போலீசார், கடந்த 6ம் தேதி தஷ்வந்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஆனால் மும்பை பாந்தாரா நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்திவிட்டு, சென்னை அழைத்துவரும் போது போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடினான்.
இதை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு தஷ்வந்தை மும்பை போலீசார் உதவியுடன் தமிழக போலீசார் கண்டுபிடித்தனர்.
மும்பையிலிருந்து இன்று காலை சென்னை அழைத்துவரப்பட்ட தஷ்வந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தாய் சரளாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட தஷ்வந்த், பணம் தராததால் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக வாக்குமூலம் அளித்தான்.
விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். வழக்கை விசாரித்த ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் தஷ்வந்தை 22 ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
