நாமக்கல்

நாமக்கல்லில், யாரோ சிலரின் தூண்டுதலின்பேரில் போலீஸ் என் மகனை பொய் வழக்கில் கைது செய்ய பார்க்கின்றனர் என்று ஆட்சியரிடம், தாய் வேதனையுடன் புகார் அளித்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் நேற்று உறவினர்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் ஆசியா மரியத்திடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், “எனக்கு மருது சூர்யா (19), தில்லைக்குமார் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மருது சூர்யா 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளான். எங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக எனது மகனைத் தொடர்ந்து படிக்க வைக்க முடியவில்லை. எனவே நானும், எனது மகன் மருது சூர்யாவும் வேலை செய்து இளைய மகன் தில்லைக்குமாரை படிக்க வைத்து வருகிறோம்.

எங்களின் வளர்ச்சி பிடிக்காத உறவினர்கள் சிலர் முன்விரோதம் காரணமாக பொய்யான காரணங்களைச் சொல்லி காவல்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில் பரமத்திவேலூர் காவலாளர்கள் ஏதோ ஒரு அவசர நோக்கத்தில் எனது மகன் மீது இரு பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுவரை எனது மகன் மீது பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாத நிலையில், காவலாளர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில் எனது மகன் மருது சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதாக மிரட்டியும், அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

எனவ, தாங்கள் இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, எங்களுக்கு நீதி வழங்கிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.