சென்னை வடபழனியில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வடபழனி ஆண்டாள் நகரில் வசித்து வருபவர் ராகவன். இவர் திருவள்ளூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ராகவன் தனது குடும்பத்தினருடன் இன்று காலை கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது  பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 120 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.