மதுரை

மதுரையில், அனிதாவின் சாவுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தி போராடிய மாணவர்களை காவலாளர்கள் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

நீட் தேர்வை எதிர்த்து மதுரை மாவட்டத்திலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அனைத்துக் கல்லூரி, பள்ளிகள் முன்பும் காவலாளர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சல்லிக்கட்டுக்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைந்து தமுக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டது போன்று, 8-ஆம் தேதி மாணவ, மாணவிகள் கூடி மாணவி அனிதாவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தமுக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் காவலாளர்கள் குவிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை தமுக்கம் பகுதியில் மாணவ, மாணவிகள் திரண்டனர். அவர்கள் திடீரென்று அந்தச் சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து காவலாளர்கள் மாணவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் காவலாளர்கள், மாணவர்களை குண்டுகட்டாகவும், வலுக்கட்டாயமாகவும் தூக்கி சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களில் ஒரு பிரிவினர் தமிழன்னை சிலை பகுதிக்கு வந்தனர். அவர்கள் சிலையின் பீடத்தில் ஏறி நின்று தமிழன்னையிடம் நீட் தேர்வு குறித்தும், மாணவி தற்கொலை குறித்தும் முறையிடுவது போன்று முழக்கங்களை இட்டனர். அவர்களையும் காவலாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது மாணவர்கள் பீடத்தின் தூண்களை பிடித்து கொண்டு கீழே இறங்க மறுத்தனர்.

மாணவர்களை சிலையின் பீடத்தில் இருந்து இறக்க காவலாளர்கள் முயற்சித்தபோது காவலாளர்கள் வசந்தகுமார், நல்லுச்சாமி ஆகியோர் பீடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை காவலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து தமுக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 48 பேரை காவலாளர்கள் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

அடுத்தடுத்து தமுக்கம் பகுதியில் போராட்டங்கள் நடந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அங்கும் ஏராளமான காவலாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.