பெரம்பலூர்

டெல்லியின் பொம்மலாட்டத்திற்கு நிச்சயமாக தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “தமிழகத்தில் ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் தனித்தனியாக ஆதரவு இல்லை என  ஆளுநரிடம் மனு கொடுத்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதில் மத்திய அரசின் தலையீடு உள்ளதா? என மக்கள் மத்தியில் பரவலான கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே, 10 எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறி ஆளுநரிடம்  மனு கொடுத்தபோது சட்டப்பேரவையை கூட்டி உங்களுடைய பலத்தை நிரூபியுங்கள் என கூறிய இதே ஆளுநர் தற்போது உட்கட்சி பிரச்சனை என்கிறார். இது உட்கட்சி பிரச்சனை இல்லை. ஜனநாயகத்தைக் காக்கும் பிரச்சனை.

எனவே, அரசியல் சட்டப்படி ஆளுநர் தன்னுடைய கடமையைச் செய்தாக வேண்டும். இல்லையேல் அது மாபெரும் மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும். 

டெல்லியின் பொம்மலாட்டத்திற்கு நிச்சயமாக தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

காவிரிப் பிரச்சனையில் தமிழக மக்களின் எதிர்ப்பையடுத்துதான் ஆளுங்கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது” என்று அவர் கூறினார்.