திமுக பிரதிநிதியாக தனது அரசியில் பயணத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின் தனது அயராது உழைப்பால் திமுக தலைவர் என்ற இடத்தை பிடிக்க 52 வருடங்கள் பாடுபட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பயணம் பல சவால்களும் சோதனைகளும் நிறைந்தவை. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மார்ச் 1, 1953-ம் ஆண்டு மூன்றாவது மகனாக பிறந்தார் மு.க.ஸ்டாலின். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரை சூட்டினார் கருணாநிதி.
ரசித்த எம்ஜிஆர் படங்கள்
தனது பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்டிய மு.க. ஸ்டாலின், தனது வீடு அமைந்திருந்த சென்னை கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். அப்பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தி கட்சிக்காக பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டார். அப்போது எம்ஜிஆரோடு அன்பாக பழகிய ஸ்டாலின் எம்.ஜி.ஆர் நடித்த படம் வெளியாகும்போது முதல் நபராக படத்திற்கு செல்வார். எம்.ஜி.ஆரும் தன்னை தொலைபேசியில் அழைத்து திரைப்படம் எப்படி இருந்தது என கேட்டதாகவும் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் தெரிவித்துள்ளார்.
கல்லூரி படிப்பு நிறைவு
1968-ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, முதல் கட்சிப் பதவியாக சென்னை கோபாலபுரம் பகுதியின் 75-வது வட்ட தி.மு.க-வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இன்னொரு புறம், தன்னுடைய கல்லூரிப் படிப்பையும் சென்னை நியூ கல்லூரியில் ஸ்டாலின் நிறைவு செய்தார். வரலாறு பிரிவில் பட்டம் வென்ற ஸ்டாலின், பின்னர் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.
மக்கள் நலனில் அதீத அக்கறை… ஆக்கப்பூர்வ திட்டங்களை கொடுத்து அசத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
துர்காவை கரம் பிடித்தார்
1975-ஆம் ஆண்டு ஸ்டாலினின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் ஸ்டாலினுக்கு திருமணம் நடைபெற்றது. துர்காவை கரம் பிடித்தார். ஒரு புறம் திருமண வாழ்க்கை, இன்னொரு புறம் அரசியல் வாழ்க்கை என ஸ்டாலினின் வாழ்க்கை பரபரப்பாக நகர்ந்துக்கொண்டிருந்தது. 1976-ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று இந்திரா காந்தி திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்.
மிசாவில் சிறை பிடிப்பு
ஆட்சியை திமுக இழந்த பிறகு, எமர்ஜென்சி காலகட்டத்தில் திமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். `மிசா’ சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்காலம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டாலினை கண்மூடித்தனமாக போலீஸார் தாக்கியதில் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. தனது தந்தை கருணாநிதி தன்னை சிறையில் பார்க்க வந்த போது போலீசார் அடித்ததில் காயம் ஏற்பட்ட காயத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக முழு கை சட்டை அணித்து சென்று பார்த்தார்.
ஒரே ரத்தம், குறிஞ்சி மலர்
சிறையில் போலீசார் தன் தலைவரின் மகனை அடித்தே கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில், ஸ்டாலின் மீது விழுந்த அடி, உதையை வாங்கி உயிர்விட்டார் சிட்டி பாபு. 1983-ம் ஆண்டின் இறுதியில் தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றார். கடந்த 1984-ஆம் ஆண்டில், முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் களமிறங்கிய மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1988-இல் ‘ஒரே ரத்தம்’ படத்தில் நந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின், ‘குறிஞ்சி மலர்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அரவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பரவலாக கவனம் ஈர்த்தார்.
ஆயிரம் விளக்கு
அதன் பின்னர், 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார். 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் பின்னர் துணை முதலமைச்சர் பதவி வகித்தார். இதனையடுத்து 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த தேர்தலில் 23 தொகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டது.
நமக்கு நாமே திட்டம்
இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் 2015-ஆம் ஆண்டு 'நமக்கு நாமே' என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நமக்கு நாமே என்ற திட்டத்தால் பொதுமக்கள் மத்தியில் திமுகவின் மீதான பார்வை திரும்பியது. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தை பிடிக்க கூட முடியாமல் திணறிய திமுக 2016 சட்டமன்றத் தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து திமுக செயல்தலைவர் பதவியை ஸ்டாலின் ஏற்றார்.
திமுக தலைவர் அந்தஸ்து
2018 ஆம் ஆண்டு கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றார். இதனையடுத்து திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று நடைபெறுகிற முதல் தேர்தல் என்பதால் அதிக கவனத்தை பெற்றது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதியில் 38 தொகுதியை கைப்பற்றி சாதித்தது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பே இல்லையென எதிர்கட்சிகள் கூறி வந்த நிலையில் அனைத்து கற்பனை கதைகளையும் உடைத்து 2021 ஆம் ஆண்டு மே மாதம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பதவிப்பிரமாணம் ஏற்று சாதித்தார்.
இதையும் படியுங்கள்
