தந்தையை மிஞ்சிய மகன்.. மாற்றுத் திறனாளிகள் & திருநங்கைக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுத்தியது போல், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச பேருந்து பயணம், மாதாந்திர உதவி தொகை உயர்வு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது மட்டுமில்லாமல் செயல்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.
கலைஞர் கருணாநிதி
தங்களுடைய பாலின அடையாளத்தின் காரணமாக சமூக புறக்கணிப்புகளுக்கு ஆளாகி பலவித கொடுமைகளை சந்தித்து வருபவர்கள் திருநர் சமூகத்தினர். அரவாணிகள் என்பன உள்ளிட்ட பல மோசமான பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தவர்களை ‘திருநங்கைகள்’ என மரியாதையாக அழைக்கும் வகையில் அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சட்டம் இயற்றினார்.
திமுகவின் சாதனை
இதனால் திருநங்கை சமூகத்தினர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தையும் கருணாநிதி அமைத்தார். இதன் காரணமாகவே திருநர் சமூக மக்களிடத்தில் கருணாநிதியின் மேல் அளவற்ற அன்பும், மரியாதையும் உருவானது. இதே போல மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்தது மட்டுமில்லாமல் செயல்படுத்திக் காட்டியவர் கருணாநிதி.
முதல்வர் மு.க ஸ்டாலின்
தந்தை பத்து அடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய்வார் என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு. இதுவரை அரசால் வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித் தொகையை ரூ.1,000-லிருந்து, ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நலனுக்காக முதல்வர் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இதே போன்று மாற்றுத் திறனாளிகளுக்கு சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி, கருவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது.
மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குதைப் போல் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்தில் இலவசப் பயணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. உடனே மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.
இதையும் படிங்க..இலவச பேருந்து முதல் புதுமைப்பெண் திட்டம் வரை.. பெண்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு செய்த சாதனைகள் !!
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடும், தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைத்தும் அதிரடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளிகள் பயனடைகின்றனர்.
வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 விழுக்காடு வீடுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது என்பது இது போன்ற திட்டங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..இலங்கை தமிழர்கள் அநாதைகள் அல்ல.. சொல்லி அடித்த முதல்வர் மு.க ஸ்டாலின் - திமுக அரசின் இமாலய சாதனைகள் !