கள்ளக் காதலை கைவிட எச்சரித்த பழைய கள்ளக் காதலனை புதிய கள்ளக் காதலனை வைத்து கொன்று புதைத்து நாடகமாடிய பெண்ணின் காதலனை கைது செய்துள்ளனர்.

ஆவடி காமராஜர் நகர் ராமலிங்கபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் சுந்தரம். பூக்கடை ஊழியரான இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த செப்டம்பர் 2ம் தேதி வேலைக்கு சென்ற சுந்தரம் மாயமானார்.

இதுகுறித்து தாய் யசோதா கொடுத்த புகாரின் பேரில், ஆவடி இன்ஸ்பெக்டர் கர்ணன் வழக்கு பதிவு செய்தார். விசாரணையில், சுந்தரம் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும் உடல், ஆவடி கவுரிபேட்டையில் ஒரு வீட்டில் புதைக்கப்பட்டதும் தெரிந்தது.

இதுகுறித்து விசாரித்ததில், ஆவடி கவுரிபேட்டை பழைய கள்ளுக்கடை தெருவில் கணவரை இழந்த அமுதா என்பவருக்கும் சுந்தரத்துக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.  

இருவரும் தனிமையில் சந்தித்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.  இதன் பிறகு அமுதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திவான் முகமதுவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சுந்தரம் அமுதாவை சந்தித்து, ‘திவான் முகமதுவுடனான கள்ளத்தொடர்பை துண்டித்து விடு, இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவேன்’’ என மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அமுதா மற்றும் உறவினர் ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் திவான் முகமது, அவரது நண்பர் கோபி ஆகியோர் சுந்தரத்தை கொலை செய்து திவான் முகமது வீட்டில் புதைத்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக அமுதா, ராஜேஸ்வரி, கோபி ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  முக்கிய குற்றவாளியான திவான் முகமது தனிபப்டை போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கடந்த 6 மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.

இந்நிலையில், அவன் கடலூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று காலை அங்கு சென்ற தனிப்படை போலீசார் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த திவானை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர்,அவரை போலீசார்  ஆவடி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.