அடுத்து இரண்டு தினங்களில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை தொடரும் என்றும், சென்னைக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக வீசக்கூடிய காற்றானது தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் நிலவ துவங்கியுள்ளது.

இந்த அமைப்பானது அடுத்துவரும் 5 தினங்களில் வலுப்பெற்று தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும். தற்போது மன்னார்வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 8 செ.மீ., தூத்துக்குடி 6 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரை தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை தொடரும். சென்னைக்கு தற்போது மழையில்லை. அடுத்து வரும் 5 நாட்களில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.