சென்னை மயிலாப்பூரில், அஸ்வத் என்ற இளைஞரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசன்புரம் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத் என்கிற சூசை(20). இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை மயிலாப்பூர் பகுதியில் மாதவப் பெருமாள் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அஸ்வத் உயிர் பயத்தில் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து அலறியபடி ஓடினார். அப்போது அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்வத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அஸ்வத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைத்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மவுலி என்ற ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.