சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க, மத்திய அரசு புதிய நோட்டுகளை அதிகளவில் அச்சடிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட உபயோகிப்பாளர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் நேற்று நடைபெற்ற இந்தக் கழகத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில், கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்பு ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்து, ரூ.2000 நோட்டை வெளியிட்ட மத்திய அரசு, சில்லறை நோட்டுகளை அதிகளவில் அடித்து விநியோகிக்காததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதன் மூலம் குளறுபடிகள் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன.
மக்கள் சிரமங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை விடுவதைத் தவிர்த்து, சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க அதிகளவில் புதிய ரூ.500, ரூ.100, ரூ.50 நோட்டுகளை அச்சடித்து வெளியிட வேண்டும்.
புதிய ரூ.2000 நோட்டுகளைப் பதுக்கி வைத்திருப்பவர்களிடம் அந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட உபயோகிப்பாளர் இயக்கத்தின் தலைவர் வி. மகேசுவரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
