The new governor will act neutrally - Stalin belief
தமிழக மக்கள் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் புதிய ஆளுநர் செயல்படுவார் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமனம் செய்யப்பட்டார்.
பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் நியமனத்துக்குப் பிறகு, தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. உடல்நலக் குறைவால் ஜெயலலிதா உயிரிழந்தார். இதன் பின்னர், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார்.
அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா நியமனத்துக்கு பிறகு, முதலமைச்சராக பதவியேற்கும் நிலையில், அவர் சிறை சென்றார். இந்த நிலையில், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.
தமிழகத்தில் ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ஓராண்டு காலத்துக்குப் பிறகு, தமிழகத்துக்கு புதிய ஆளுநரை மத்திய அரசு நியமனம் செய்தது.
மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் நியமனத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திமுகவின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பொறுப்பு ஆளுநர் மட்டுமே இருந்ததால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தின் முன்னேற்றம் அனைத்தும் தேக்க நிலைக்கு வந்து விட்டது.
தமிழக மக்கள் நலன் கருதி சுதந்திரமாக, நடுநிலையோடு புதிய ஆளுநர் பன்வாரிலால் செயல்படுவார் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்பு, கடடையை உணர்ந்து, ஆளுநர் செயல்படுவார் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
