சென்னை திருமங்கலத்தை அடுத்த காமராஜ் நகரைச் சேர்ந்த விஜயா என்பவர் தனது மகனை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாகவும், தனது மகனை மீட்டுத் தரவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இந்த வழக்கு வினோதம் நிறைந்ததாகவும், திருப்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

விஜயா – வேலு தம்பதிகள் அன்னை சத்யா நகரில் வசித்து வருகின்றனர்.  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்தான் ஒப்பந்ததாரர் குணசேகரன்.

குணசேகரன் தற்போது மிகப்பெரிய காண்ட்ராக்டராக வளர்ந்து சமூகத்தில் மிகப் பெரிய ஆளாக உள்ளார். இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாவின் மகன் விக்ரமை கடத்திக் சென்றதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்து வீட்டையும் காலி செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குணசேகரன் பங்கேற்றுள்ளார். இதைப் பார்த்த விஜயா, தொலைக்காட்சி அலுவலகத்துக்குச் சென்று குணசேகரனின் முகவரியைப் பெற்று, அவரது வீட்டுக்கு சென்றார்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் தனது மகன் அங்கு வளர்ந்து வருவைதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த விஜயா, மகன் விக்ரமை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் குணசேகரனும் அவரது மனைவி சாந்தியும் அதற்கு மறுத்து விட்டனர்.

இதையடுத்து தனது மகனை மீட்டுத் தருமாறு திருமங்கலம் காவல் நிலையத்தில் விஜயா புகார் அளித்தார். இது குறித்து குணசேகரனுக்கு சம்மன் அனுப்பிய காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவரோ புதுக்கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். விக்ரம், விஜயாவின் மகன்தான்  என்பதை ஒத்துக்கொண்ட குணசேகரன், 13 ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டதாகவும்., அப்போது விஜயா, ஏற்கனவே தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாகவும். விக்ரமை தங்களால் வளர்க்க முடியாது என்பதால் அவரை நீங்களே எடுத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

விஜயாவின் விருப்பப்படியே தான் விக்ரமை வளர்த்து வருவதாகவும் குணசேகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் மகன் விக்ரமிற்கு காவல் துறையினர் மனநல ஆலோசனை வழங்கினர், விக்ரமை அவரது பெற்றோர்களுடன்  செல்லுமாறு அறிவுறுத்தினர். வார இறுதிநாட்களில் மட்டும் விஜயாவுடன் தங்கிக் கொள்ள விக்ரம் ஒப்புக் கொண்டார்,

ஆனால் விஜயாவோ, விக்ரம் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என விரும்பினார், மகன் விக்ரமோ அதை விரும்பவில்லை, தன்னை வளர்த்த பெற்றோரிடமே இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

தற்போது விக்ரமை யாருடன் அனுப்பி வைப்பது ? பெற்றெடுத்த விஜயாவுடனா? அல்லது பாசமாக வளர்த்த குணசேகரிடமா?..

தற்போது இந்த வழக்கை நீதிமன்றத்தின் கைகளில் விட்டுவிட போலீசார் முடிவு செய்துள்ளனர்..