முறைகேடாக பணியில் சேர்ந்ததாக 236 பேரை பணியில் இருந்து நீக்கி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆவின் ஊழியர்கள் பணி நீக்கம்
அதிமுக ஆட்சி காலத்தில் தஞ்சை, திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் கடந்த 2020-2021ம் ஆண்டில் நேரடி பணி நியமனங்கள் மூலம் முறைகேடாக பணியமர்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், மதுரை 47பேர், திருச்சி 40பேர், தேனி 38பேர், திருப்பூர் 26பேர், விருதுநகர் 26பேர, நாமக்கல் 16பேர், தஞ்சாவூர் 8பேர் என ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் இருந்தும் மொத்தம் 236பேரின் பணி நியமனங்கள் முறைகேடாக நடைபெற்றதாக தெரியவந்தது.

நீதிமன்றத்தில் முறையிட்ட ஊழியர்கள்
இதனையடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த 2356 பேரையும் பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் முறைகேடாக பணி நியமனம் செய்ய காரணமாக இருந்த ஒன்றிய அதிகாரிகள் சுமார் 26பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்து ஆவினில் பணியாற்றிய 25 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிநீக்க தொடர்பாக எந்த முன் அறிவிப்பும், நோட்டீசும் கொடுக்காமல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்
எனவே அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால் தடைவிதித்தனர். மேலும், ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக ஆவின் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
