The Madras High Court has also ordered a one-month extension to decide on Lata.

மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் எனவும் அவருக்கு முடிவெடுக்க ஒரு மாதம் கால அவகாசம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா' என்ற தனியார் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இந்த கடைக்கு வாடகையாக மாதம் 3,702 ரூபாயை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வாடகையை 21, 160 ரூபாயாக உயர்த்தி மாநகராட்சி உத்தரவிட்டது. 

இதுகுறித்து லதா ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் பதிலளித்த மாநகராட்சி, குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கடைவாடகை மாற்றியமைக்கப்படுவதாகவும், இதுவரை முறையாக செலுத்திவந்த லதா ரஜினிகாந்த் திடீரென எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உயர்த்தபட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லாவிட்டால் கடையை காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் எனவும் தெரிவித்தது. 

இதையடுத்து லதா ரஜினிகாந்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் எனவும் அவருக்கு முடிவெடுக்க ஒரு மாதம் கால அவகாசம் எனவும் உத்தரவிட்டது.