கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளரை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவின்படி குண்டர் சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாட்சியர் பெருமாள் தலைமையில் வருவாய்த் துறையினர் கிருஷ்ணகிரி - ஒசூர் நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் கடந்த 11-ஆம் தேதி ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து, மருதாண்டப்பள்ளி கிராம உதவியாளர் கிருஷ்ணனிடம் ஒப்படைத்து, சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், சுண்டகிரி என்னும் இடத்தில் லாரியை மறித்த லாரியின் உரிமையாளர் சின்னாறு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, லாரியுடன் சென்றார்.

இதுகுறித்து சூளகிரி காவலாளர்கள் வழக்குப் பதிந்து, ராமசாமியை கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.

இவர் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், இவரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பரிந்துரை செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், அந்த பரிந்துரையை ஏற்று ராமசாமியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு அளித்தார். அதன்படி ராமசாரி குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.